Wednesday, August 13, 2014

காணாமல்போகும் கடிதஇலக்கியம்*முனைவர் சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி



           
           

கம்பிக்குள் காலத்தைச் சொருகிவைத்த வித்தையை நான் என் சாரிப்பாட்டியிடம்தான் கற்றேன்.

அதிகமாகப் படிக்காவிட்டாலும் எழுத்துக்கூட்டி எதையும் வாசிப்பதில் என் பாட்டி சமர்த்தள்.

எந்தக் கடிதம் வந்தாலும் அதைப் படித்துவிட்டு முன்னறையின் மேற்குமூலையில் ஆணியடித்துத் தாத்தாவின் குடைக்கம்பு மாதிரி இருக்கும்,

 கீழே மரவில்லை பொருத்தப்பட்ட கடுதாசிக் கம்பியில் சொருகிவைத்துவிடுவாள்.

வெள்ளையடிக்கும்போது கழித்துவிடலாமா? என்று  நான் ஒருசமயம் கேட்டபோது பாட்டி கோபப்பட்டிருக்கிறாள்.”முப்பதுவருஷ பொக்கிஷம்டா அதப்பத்தி உனக்கென்னடா தெரியும்?” அவள் கோபம் நியாயம்தான்,வரலாற்றை அழிப்பதில்தானே நம் வாழ்க்கையே கழிகிறது.

.கட்டைகுத்தப்பட்ட ஒவ்வொரு பழையவீட்டின் கால்நூற்றாண்டு வரலாற்றைத் தன்னுள் பொதிந்து ஈசானமூலையில் தொங்கிக்கொண்டிருந்த அந்தக் கடிதக்கம்பிகளைப் போல் கடிதங்களும் நம்மைவிட்டுத் தொலைந்து வெகுநாட்களாயிற்று

.

பாட்டியோடு நான் இழந்தவற்றுள் மிகவும் என்னைப் பாதித்தது கடிதம் எழுதுவதாகத்தான் இருக்கமுடியும்.கையெழுத்தும், எழுதுவதும் கொஞ்சம் கொஞ்சமாய் அப்பால் போய்க்கொண்டிருக்கின்றன.

மாதத்திற்கு இரண்டோ மூன்றோதான் கடிதங்களே வருகின்றன.அதுவும் வணிகச் சாயல்கொண்ட கடிதங்கள்,தொலைத்தொடர்புத் துறையின் இணையப்பயன்பட்டுக் கட்டணக்கடிதம்,வீட்டுக்கடன் மாதத்தவணை கட்டிய ஒப்புகைச்சீட்டு என்ற வரிசையில் இன்ன பிற.



 நம் நலத்தை அறிய யாருக்கும் ஆவல் இல்லாமலும், நமக்கு யார் நலத்தையும் அறிய நேரமில்லாமலும் நம் நாட்கள்  நகர்கின்றன. 

மின்னஞ்சல் முகவரிகள் வந்தபின் பொங்கல் வாழ்த்து அட்டைகளையோ,அஞ்சலடைகளோ நம்மை விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக அகன்று போய்க்கொண்டிருக்கின்றன. 



டாக்டர்மு.வரதராசனார்கடிதங்கள்

திருநெல்வேலி மாவட்ட மத்திய நூலகத்தில் பேரறிஞர் அண்ணாவின் கடிதங்கள்,டாக்டர் மு.வரதராசனாரின் இலக்கியக் கடிதங்கள்,நேருவின் கடிதங்கள் ஆகியவற்றை வாசித்து புளகாங்கிதம் அடைந்திருக்கிறேன்.

மு.வ.வின் தெள்ளுதமிழ் நடை எனக்கு மிகவும் பிடிக்கும். ஒன்றரையணா விலையில் சென்னை,பாரி நிலையம் 1954 ஆம்ஆண்டு வெளியிட்ட, “தம்பிக்கு, மு.வரதராசனார்” என்ற கடிதநூலின் ஒவ்வொரு வரியும் கற்கண்டுச் சொல்லமது.


அன்புள்ள எழில்..எனத்தொடங்கி, “தமிழ்மொழி நல்லமொழி தான்,ஆனால் அதை வல்ல மொழியாக ஆக்கினோமா? பெரும்பாலோர் போற்றும் மொழியாக ஆக்கினோமா? இன்று எதை எடுத்தாலும் மக்கள் தொகையே வல்லமையாக வைத்துப் பேசப்படவில்லையா? தமிழ்மொழிக்கு அறிவுக் கலைகளில் செல்வாக்குத் தந்தோமா? நீதிமன்றங்களில் உரிமை நல்கினோமா?ஆய்வுக் கூடங்களில் வாழ்வு வழங்கினோமா? இல்லையானால் வெறும் பேச்சு ஏன்?

வல்லமை இல்லாத நல்லதன்மை வாழாது தம்பி! அது பொருட்பால் இல்லாத திருக்குறள் போன்றது தான்.” மூச்சுவிடாமல் இதை நெல்லையப்பர் கோவில் உள்தெப்பக்குளப் படியில் அமர்ந்து நண்பனிடம் ஏற்றஇரக்கத்தோடு பேசிமகிழ்ந்திருக்கிறேன்.இந்த ஒரு நூலின் தாக்கத்தில் மு.வ வின் நிழற்படத்தை எங்கள் கட்டைகுத்தப்பட்ட வீட்டின் உத்திரத்தில் மாட்டிவைத்துப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.அந்த தம்பி நானாகவும் மு.வ.அவர் குரலில் எனக்குக் கடிதத்தை வாசித்துக் காட்டுவதாகவும் எண்ணிக் கொண்டதுண்டு.


 புதுமைப்பித்தன் கடிதங்கள்
...............................................................

 இளையபாரதியின் அரிய முயற்சியில் தொகுக்கப்பட்ட, “கண்மணி கமலாவுக்கு”என்ற புதுமைப்பித்தன் கடிதங்கள்,1938 முதல் 1948 வரையிலான காலகட்டத்தில்  அவரைச் சரியாகப் புரிந்துகொள்ள உதவுகின்றன.

வாழ்வை எள்ளலோடும் நையாண்டியோடும் கதைகளாகப் பதிவுசெய்த உன்னதக்கலைஞர் புதுமைப்பித்தன்,தன் மனைவி கமலாவுக்கு எழுதிய கடிதங்கள் யாதார்த்தமாய் இலக்கியச் செழுமை மிக்கதாய் அமைகின்றன.

கடிதத்தின் முதல்விளிப்பு அன்பைப் பொழிவதாய் அமைகிறது.


எனது உயிருக்கு உயிரான கட்டிக்கரும்புக்கு.., எனது அருமைக் கண்ணாளுக்கு..,கண்மணி கமலாவுக்கு..,என்று தொடங்கி புதுமைப்பித்தன் கடிதம் எழுதியுள்ளார்.புதுமைப்பித்தன் நம்பிக்கைதரும் கணவராக அவர் கடிதங்களை வாசிக்கும்போது தெரிகிறார்.


கமலா கண்ணே! கட்டிக் கரும்பே! மறந்து விடாதே. உனக்கு ஏற்படும் துன்பம் எனக்கும்தான். நாம் இருவரும் சேர்ந்தே அனுபவிக்கிறோம்

 அதனால் உனக்கென்று ஒரு வழி என்னும் அசட்டு யோசனைகளை விட்டுவிடு. மனசை மாத்திரம் தளர விடாதே! அது எனக்கு எவ்வளவு கவலை கொடுக்கிறது தெரியுமா? உன்னுடன் தவிக்கும்.

 உனது சொ..வி.” என்ற வரிகள் படைப்பைத் தொழிலாகக் கொண்ட ஒரு படைப்பாளி வாழ்க்கைச் சுழலில் சிக்கித்தவிக்கும்போது அவன் குடும்பமும் சேர்ந்து தவிப்பதையும் அவர்களை ஆற்றுப்படுத்தும் பணியையும் அவன் வேதனையை வெளிக்காட்டாமல் செய்ய வேண்டிவருகிறது என்பதையும் நம்மால் உணரமுடிகிறது.

கணவன் மனைவிக்கிடையில் அகச்செய்திகள் மட்டுமே இடம்பெறும் என்ற கருதுகோளை உடைத்து புதுமைப்பித்தன்,05.2.1948 நாளிட்ட கடிதத்தில் மகாத்மாகாந்திஜி சுட்டுக்கொலை செய்யப்பட்ட செய்தியை வருத்ததோடு பதிவு செய்துள்ளார்



சிவசுசார் வல்லிக்கண்ணனுடன் நிகழ்த்திய நேர்காணல் நூலைக் கல்லூரி நூலகத்தில் படித்துவிட்டுப் பெரியவர் வல்லிக்கண்ணனுக்கு இன்லேன்ட் கவரில் கடிதம் எழுதினேன்.

ஒரு வாரத்தில் முத்துமுத்தான கையெழுத்தோடு சென்னையிலிருந்து அவர் எழுதிய பதில் அஞ்சலட்டை என் பெயர் போட்டுக் கல்லூரி முகவரிக்கு வந்ததை நான் ஊர் முழுக்கக் காட்டித் திரிந்தது இன்றும் நினைவிலிருக்கிறது..



பதினைந்து பைசாவில் இந்தியா முழுக்க யாருக்கு வேண்டுமானாலும் கடிதம் எழுதலாம் என்பது தொண்ணுறுகளில் என் பதின் பருவக்கல்லூரிக் காலத்தில் பெருவியப்பைத் தந்தது.நெல்லை மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியின் வாரியார் அரங்கின் தாமிரசபையில் பத்துநாள் சொற்பொழிவாற்றிய திருமுருகக்கிருபானந்த வாரியார் சுவாமிகளுக்குச் சந்தேக வினாக்களோடு நான் கடிதம் எழுதியதும்,அவர் ஒருமாதம் கழித்துப் பதில் எழுதியதும் மகிழ்வான நிகழ்வுகள்.


பேனா நண்பர்கள் குழுவிலும் நான் உறுப்பினர்,சொல்லவேண்டியதில்லை.

சில நாட்களில் பத்துப்பதினைந்து கடிதங்களுக்கு இரவோடு இரவாகப் பதில்போட்ட நிகழ்வுகள்கூட உண்டு.

எரியோடுஆறுமுகம் அண்ணன் நைஸ் காகிதத்தில் முப்பது பக்கக்கடிதம் கூட எனக்கு எழுதியிருக்கிறார்.



கடிதம் எழுதுவதைவிடக் கடிதங்களுக்குக் காத்திருப்பது சுகமானது.

ஆண்டிநாடார் பாத்திரக்கடையில் பித்தளைப் பாத்திரத்தில் பெயர் வெட்டித்தரும்,மிகத்தேர்ந்த, சிற்பியின் நேர்த்தியைப் பெற்ற வள்ளிநாயகம் அண்ணாச்சியின் கையெழுத்தைப் போன்று  சிலர் எழுதிய கடிதங்களைக் கண்ணில் ஒற்றிக்கொள்ள வைக்கும்.


வல்லிக்கண்ணன் கடிதங்கள்
.................................................................

உருண்டை உருண்டையாய் அச்சுப்பதித்ததைப்போல் நேர்த்தியாய் எழுதி தெளிவாகக் கையெழுத்திடும் பழக்கம் வல்லிக்கண்ணனுக்கு. “நடை நமது” வலைப்பூவின் ஆசிரியருக்கு வல்லிக்கண்ணன் 28.5.2001 அன்று எழுதிய கடிதத்தில் பதினைத்து பைசாவிலிருந்து ஐம்பது பைசாவுக்கு அஞ்சலட்டை விலையுயர வருத்ததோடு பதிவு செய்துள்ளார்.



“அன்பு நண்ப, வணக்கம். கார்டுகள் இரண்டு சும்மா கிடக்கின்றனவே என்பதால் எழுதுகிறேன். இன்று     ஒன்றும், நாளை ஒன்றுமாக. ஜூன் 1 முதல் கார்டு விலை  50 பைசா ஆகிறது. 3 ரூபாய் கவர் இனி 4 ரூபாய். இப்படி கட்டணங்கள் உயர்கின்றன. இப்படிப் பலவகைகளிலும் விலைவாசிகள் உயர்கிறபோது, சிற்றிதழ் நடத்துகிறவர்களின் சிரமங்கள் மேலும் அதிகரிக்கும். சிற்றிதழ்கள் நடத்துகிறவர்களில் சிலபேர் வெற்றிகரமான   தொழிலாக அதை நடத்துகிறார்கள்.பல்சுவை இதழ்’    என்று கூறிக் கொண்டு, மசாலா பத்திரிகை மாதிரியே தயாரிப்பதோடு, கணிசமான அளவு விளம்பரங்களும் சேகரித்து விடுகிறார்கள். அவ்வப்போது சிலர் கவிதைத் தொகுப்பு வெளியிடுகிறோம்; ஹைக்கூ தொகுப்பு தயாரிக்கிறோம்; கவிதைகளோடு நூறு ரூபாய் பணமும் அனுப்புக என்று அறிவிக்கிறார்கள். தங்கள் கவிதை (ஹைக்கூ) புத்தகத்தில் இடம்பெற்றால் சரிதான் என்று கவிதை(ஹைக்கூ) உடன் பணமும் அனுப்பி வைக்கிறார்கள் இளைஞர்கள் பலர். அன்பு வ.க,/..


வல்லிக்கண்ணனின் கடிதங்களில் பெரிய ஈர்ப்பு உண்டு எனக்கு.கடிதத்தின் இடப்புறமேல் பகுதயில் அவர்பெயரை எழுதிச்சிறுகோடு போட்டு கீழே இருசிறு புள்ளிகள் வைத்து எழுதத்தொடங்குவார்,அதை நான் இன்றும் பின்பற்றிக் கொண்டிருக்கிறேன்.



தி.க.சி கடிதங்கள்
.......................................



பதினைந்து பைசா அஞ்சலட்டையால்  மார்ச்சிய விமர்சகர் தி.க.சி சாதித்தது கொஞ்சநஞ்சமல்ல. 

புதிதாக யார் எழுதினாலும் தி.க.சி ,அவர்களின் படைப்புகளைப் படித்துவிட்டு நறுக்குத்தெறித்தார்ப்போல் அஞ்சலட்டையில் விமர்சனம் எழுதிப்போட்டு விடுவார்.

அஞ்சலட்டையின் சிறுபரப்பில் அவரால் சிறகை விரித்துப் பறக்கமுடிந்திருக்கிறது. தாமரை இதழின் ஆசிரியராய் அவர் பொறுப்பேற்று நடத்தியபோது நிறைய இளம்எழுத்தாளர்களை அஞ்சலட்டையால் வளர்த்தெடுத்தார்.

அவர்களின் படைப்புக்கள் எந்த இதழில் வெளிவந்தாலும் தி.க.சி.யின் விமர்சனஅஞ்சலட்டை அவர்களை உடன் சென்றடையும்.



 நாவலாசிரியர் கி.ரா.வுக்கு17-08-2011அன்று தி..சி எழுதிய கடிதம்,மகனை இழந்துதவிக்கும் தந்தையின் மனநிலையை சோகத்தோடு உணர்த்துகிறது.



“பேரன்புச் செல்வர், பழம்பெரும் அருமைத் தோழர் கி.ரா. அவர்களுக்கு,


வணக்கம். 5.7.11 இல் தொடங்கி, 11.7.11 ல் தொடர்ந்து, 12.7.11 இல் தாங்கள் அனுப்பிய மடல், 13.7.11 புதன் மாலையில் எனக்குக் கிடைத்தது; 6 பக்கங்கள் கொண்ட அந்தக் கடித இலக்கியத்தை 3 முறை வாசித்து விட்டேன் ; நண்பர் வே.முத்துக்குமார், ஒவியர் பொன் வள்ளிநாயகம் ஆகியோரும் அதை மிக ஆர்வத்துடன் படித்தனர். நண்பர் முத்துக்குமார், உங்கள் இரங்கல் கடிதத்தை எனது வலைப்பூவில் ஏற்றி, உடனே உலகுக்கு அறிவித்து விட்டார் ! அது போலவே அருமை நண்பர் தீப நடராஜனின் ஆறுதல் மடலையும் எனது வலைப்பூவில் உடனே பதிவு செய்து விட்டார்; இவ்விரு அருமையான இலக்கியக் கடிதங்களையும் எத்தனை பேர் படித்தார்கள் என்ற விவரம் தெரியவில்லை; இவை இரண்டும் எனது கடிதக் கருவூலத்தில் அரிய சேமிப்புகளாக விளங்கும் ; வாய்ப்புக் கிடைத்தால், அச்சுவடிவிலும் மக்களுக்கு எப்போதாவது கிடைக்கலாம் ! நிற்க


எனது மூத்த மகன் கணபதி, 2011 ஜுன் 22 மதியம் , சென்னை ஆதம்பாக்கத்தில் , திடீர் என்று, மாரடைப்பால் மறைந்துவிட்டான். அவனைப் பற்றிய இளம்பருவ நினைவுகள், தங்கள் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. இது எனக்கு மிகுந்த வியப்பும் மன நிறைவும் தருகிறது; உங்கள் நினைவிலும் இடம்பெற்ற அவன், பாக்கியசாலி தான் ! ஒவியம், கவிதை, கலை இலக்கியம் , இவற்றில் அவனது தம்பி கல்யாணிக்கு ( வண்ணதாசனுக்கு ) அவன் தான், 'முன்னத்தி ஏர்' பிடித்தவன் ! அவன் மறையும் போது, அவனுக்கு வயது 66; வயது  6 ஆனால் என்ன ? 66 ஆனால் என்ன ? மூத்த மகனின் எதிர்பாராத மறைவு, என்னை மிகவும் வாட்டியது. ஜுலை 22 வரையில் ; இப்போது ஆகஸட்  22 வரப்போகிறது , இன்னும் சில நாள்களில் ! அவன் மறைந்து 60 நாள் ஆகப் போகிறது; உங்களைப் போன்ற பாசமிகு தோழர்களின் அன்பும், அரவணைப்பும், ஆறுதல் மொழிகளும், காலதேவனின் கருணையும், என் துயரச் சுமையையும், வலிமையையும் பெருமளவு குறைக்க உதவியுள்ளன; இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விட்டேன் ; தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. என் சார்பிலும், என் குடும்பத்தார் அனைவரின் சார்பிலும், மிக்க நன்றி. தாங்களும், தங்கள் துணைவியாரும், குடும்பத்தாரும், நண்பர்களும் நலம் தானே ? 'சு.ரா 80' விழாவில் தாங்கள் பங்கேற்றதும், 'கதைசொல்லி' 27 வது இதழ் விரைவில் வர இருப்பதும், விகடனில் தங்கள் நாட்டுப்புறக் கதையும், தினமணிக்கதிர் சுதந்திர தின மலரில் தங்கள் பேட்டியில் சொல்லியுள்ள சீரிய கருத்துக்களும் பாராட்டத்தக்கவை; தாங்கள் வாக்களித்த 'புதுவை வாழ்க்கை அனுபவக்குறிப்புகள்' எந்த நிலையில் உள்ளன ? தங்கள் துணைவியாருக்கும் என் வணக்கம்.



படைப்பாளியின் மனநிலையை தி.க.சி.யின் இக்கடிதம் வெளிப்படுத்துகிறது.




 வண்ணதாசனின் கடிதங்கள்
.................................................................


தி.க.சி யின் கடிதங்கள் கங்கு என்றால் அவர் மகன் வண்ணதாசனின் கடிதங்களில் தாமிரபரணிப் பிராவகம்.

யாரும் பார்க்கத் தவறுகிற சாதாரணக் காட்சிகளைக் கவனமாய் உள்வாங்கி கவிதையும் உரைச்சித்திரமும் கலந்த அழகியல் நடையால் கடிதங்கள் வருவார்.

புதிதாய் எழுதவரும் இளம்படைப்பாளர்கள் கொண்டாடும் நேர்த்தியான நடை இவருடையது. 

 “ தெல்லாம் ஒரு காலம்!” எனும் கட்டுரையில் வண்ணதாசன் வழக்கொழிந்துபோய்க் கொண்டிருக்கும் கடிதங்கள் குறித்து இவ்வாறு எழுதியுள்ளார்

“நான்கு நாட்கள் வெளியூருக்குப் போய்விட்டு வந்தால், வீட்டில் எட்டுக் கடிதங்களாவது வந்திருக்கும். தொட்டிலில் கிடக்கிற பிள்ளையைக்கூட அப்புறம்தான் பார்க்கத் தோன்றும். பிரயாண அலுப்பு மாறாத முகமும், கசங்கினஉடை களுமாக ஒவ்வொரு கடிதத்தையும் வாசிக்க வாசிக்க, விலாப்புறத்தில் மட்டுமல்லஉடம்பு முழுவதும் சிறகுகளாக முளைத்திருக்கும்.

மு.பழனி, பமேலா ராதா, எஸ்.வி.அன்பழகன், காசர்கோடு மலையப்பன், ஆனந்தன், அசோகன், லிங்கம், காயத்ரி, ஆர்.சோமு, பரமன், கார்த்திகா ராஜ்குமார், சிவகங்கை ரவி என்று எத்தனை பேரிடம் இருந்து எவ்வளவு கடிதங்கள்! இவை தவிரவல்லிக்கண்ணனும், ராமச்சந்திரனும், சின்னக் கோபாலும், அம்பையும், ரவிசுப்ரமணியனும் எழுதிய கடிதங்கள் இன்னொரு பக்கம். மல்லிகைப் பூ என்றால் தினசரி பார்க்கலாம். மனோரஞ்சிதம் அப்படியில்லை. அப்படி எப்போதாவது மிகச் சுருக்கமாக எழுதி, மிக நெருக்கமாக உணரவைத்து வருகிற ந.ஜயபாஸ்கரனின் கடிதம். மாணிக்கவாசகத்தின் ஒரே ஒரு கடிதம்.


இத்தனை பேருக்கும் வேலை இருந்தது; படிப்பு இருந்தது; சொல்ல முடிந்ததும், முடியாததுமாக எவ்வளவோ இருந்தன. கூடவே, பக்கம் பக்கமாக எழுதுவதற்கான நேரமும், மனமும் இருந்தன. கடிகாரத்துக்கு என்ன, இன்றைக்கு 24 மணி நேரம், அன்றைக்கு 48 மணி நேரமா?

அதே சின்ன முள், பெரிய முள்! வெயில் காலம் என்றால், பகல் நீளம். மழைக் காலம் எனில், இரவு கூடுதல். அன்றைக்குக் கரைந்த காகம்தான் இன்றைக்கும் கரை கிறது. முடி திருத்தும் கடைகளில் கன்னித் தீவு படிக்க இன்னும் சிறுவர்கள் வந்துகொண்டு இருக்கக்கூடும். நசுங்கித் தகடான மஞ்சள் செவ்வந்திப் பூக்கள், கல்லறைத் தோட்டத் துக்கு இப்போதும் வழி காட்டு கின்றன. சுவரொட்டி ஒட்டு பவர் விரல்களிலும் வாசிப்பவர் கண்களிலும் மாற்றமில்லை. பெரும்பாலானவர்கள் மல்லாந்து தான் தூங்குகிறோம். தபால் காரர்கள், கடிதங்களை இன்னும் சைக்கிள்களில் வந்துதான் விநியோகிக்கிறார்கள். ஆனால், கடிதங்கள் காணாமல் போய் விட்டன. கடிதங்கள் மட்டுமா? கடிதங்கள் எழுதுபவர்கள்கூட!”


  “எல்லோருக்கும் அன்புடன்’ என்று கடிதத்தை முடிக்கும் வண்ணதாசன் அதை வாழ்வியல் இலக்கியமாக மாற்றியுள்ளார்.

 அவரதுவண்ணதாசன் கடிதங்கள்,சில இறகுகள்,சில பறவைகள் ஆகிய இருகடிதத்தொகுதிகளும் கடிதஇலக்கியத்தின் மைல்கற்களாய் அமைகின்றன.


புலவர் கீரன் “நாடகமயில்” என்ற தலைப்பில் நெல்லை வானொலியில் பேச அதைக் கேட்ட மகிழ்ச்சியில் அவருகுக் கடிதம் எழுத முகவரி கேட்டு,முதன்முதலாய் திருநெல்வேலி வானொலி நிலையம் நுழைந்தேன்.

ஒருவேளை அஞ்சலட்டை அவரிடம் இல்லாவிட்டால் என்ன செய்வதென்று, ரிப்ளைகார்டு முப்பது பைசாவுக்கு வாங்கிக் கடிதம் எழுதி,திரும்பிவரு மறுமடலில் என் முகவரியை எழுதிப் புலவர் கீரனுக்கு அனுப்பியது பசுமரத்தாணிபோல் நெஞ்சில்.


கி.ராஜநாராயணன் கடிதங்கள்
................................................................



அப்போது நான் வண்ணதாசன் படைப்பிலக்கியங்கள் குறித்த முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டிருந்தேன்.

வண்ணதாசன் படைப்பிலக்கியங்கள் பற்றி கி.ரா.என்ன நினைக்கிறார் என்று ஆய்வேட்டில் பதிவுசெய்ய வேண்டி பாண்டிச்சேரியில் உள்ள அவரிடம் தொலைபேசியில் பேசினேன். 

 “உங்களைப் போன்ற பேராசிரியர்களும் கூடவா கடுதாசி எழுதுவதை மறந்துவிட்டீர்கள் கடுதாசி எழுதுமய்யா பதில்போடுகிறேன்” என்று மிகஇயல்பாகப் பேசினார்.

அவர் சொன்னமாதிரியே உடனே பதிலும் போட்டார்.கி என்ற எழுத்தில் தொடங்கி அவர் பெயரை வளைந்த கோட்டோவியம் போல் அழகாக வரைந்து,அவரது முழுமுகவரியையும் எழுதி தேதியுடன் நீண்ட கடிதம் எழுதியிருந்தார்..


”அன்பார்ந்த பேரா.ச.மகாதேவனுக்கு நலம்.ஆசிரியர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் எப்பவும் மாணவர்களை முதற்கொண்டு கேள்விகள் கேட்டே பழக்கம்.பதில் சொல்லி பதில் சொல்லி எங்களுக்குப் பழக்கம்.சட்டசபையில் இருக்கவேண்டியவர்கள் பள்ளியில் இருந்துகொண்டிருக்கிறீர்கள்.கேள்விமழை சக்கப்போடுதான்,பேப்போடு போட்டிருக்கிறீர்கள்.(“இந்தக் கேள்விக போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா”) என்று அந்தக் கடிதம் தொடர்ந்தது.


கி.ரா.கடிதம் எழுதுவதை நேசித்தார்.தன் கையெழுத்தை ஓவியமாகப் பாவித்து வரைந்தார்.நான்கு வரிகளில் அவரால் கிண்டல் செய்து நறுக்கென்று அழகாக எழுதமுடிகிறது.

பாரததேவியைத் தன் மகளாகப் பாவித்து அவர் எழுதிய கடிதங்கள் அழகியல் பொக்கிஷம்.


மின்னஞ்சல்,முகநூல்.ட்விட்டர்,ஸ்கைப்,வலைப்பூக்கள் வந்தபின்பு நாம் கையால்எழுதுவதும்,கடிதம் எழுதுவதும் வெகுவாகக் குறைந்திருக்கிறது.

மைகூடுகள்,மையூற்றுப்பேனாக்கள்,கோடுபோடும் ரூல்தடிகள் எல்லாம் அப்பால் போய் யாவற்றையும் கணினியும் இணையமும் ஆக்கிரமித்துவிட்டன.

தனித்துவமான வளைவு நெளிவுகள் நிரம்பிய அழுத்தமான நம் கையெழுத்துகளும் நம் மனப்பாரத்தை இறக்கிவைக்கும் கடிதங்களும் நம்மை விட்டுத் தொலைவது நல்லதல்ல. 


கட்டுரையாளர் கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர்
  தமிழ்த்துறைத்தலைவர்,சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,

               ரஹ்மத் நகர், திருநெல்வேலி..627 011
              பேச: 9952140275, mahabarathi1974@gmail.com

நன்றி:தமிழ் இந்து,கலை இலக்கியம்,

Labels: , , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home