Saturday, November 29, 2014

வண்ணதாசனின் மொழிப்பூக்கள்



ஒளியிலே தெரியும் மொழிஓவியர்
............................................................................

முனைவர் பட்ட ஆய்வுகாக எனக்குப் பிடித்த எழுத்தாளர் வண்ணதாசனின் ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’ தொகுப்பிலிருந்து ‘ஒளியிலே தெரிவது’ தொகுப்பு வரை வரிக்கு வரி வாசித்திருக்கிறேன்.
 
சாணை பிடிக்கும்போது தெறித்து விழும் நெருப்புச் சிதறல்களைக் கூட அவரால் ரசிக்கமுடிந்ததையும் வெகுநுட்பமாகத் தேர்ந்த சொற்களால் கதைகளாய் பதிவுசெய்ததையும் பலமுறை வாசித்து மகிழ்ந்திருக்கிறேன்.

சிவசுஅய்யா,கட்டளைஅய்யாவோடு வண்ணதாசன்அய்யா வீட்டுக்குப் போனபோதெல்லாம் அன்போடு இயல்பாய் பேசியது என்றும் மறக்கஇயலாதது.

1962 இல் பத்தாம்வகுப்பு மாணவனாக எழுதத்தொடங்கிய வண்ணதாசன் தொடர்ந்து 52 ஆண்டுகளாய் எழுதிய கதைகள் மலைக்க வைக்கின்றன.

சுந்தரத்துச் சின்னம்மையும்,குஞ்சுவும்,சின்னுவும்,தனுவும்,புஜ்ஜியும் மறக்க முடியாத பாத்திரங்கள்.

விறகுத் தொட்டிக்காரன் ஒரு மாங்குச்சியை ஓடிக்க,அந்த வாசனை நுகர்ந்து வீட்டுக்குள்ளிருந்து ஓடிவந்த ஆயாவைக் காட்டிய”ஒரு மரம்..சில மரம்கொத்திகள்” கதையில் அவர் எழுதிய “முடிக்கிறதிலே என்ன கஷ்டம்..ஆரம்பிக்கிறதுதான் கஷ்டம்” எனும் வரி இன்றும்நினைத்துப் பார்க்கும் அருமையான வரி

.”தெரிந்ததைத் தெரியாது போலப்பேசுகிற கெட்டிக்காரத்தனம் தானே இப்போது செல்லுபடி ஆகிறது.” என்று அவர் “எழுதி வைக்காதவை” கதையில் எழுதியிருப்பார்.


சமவெளி எனும் வலைப்பூவில், முகநூலில் அவர் எழுதிய எழுத்துப்பூக்கள் “சின்னவிஷயங்களின் மனிதன்” நூலும்,”நொடிநேர அரைவட்டம்” எனும் கவிதை நூலும் சந்தியா பதிப்பகத்தால் வெளியிடப்பட உள்ளன.வாழ்க வண்ணதாசன்..வரும் ஆண்டில் அழகான கதைகள் அவரிடம் அடுத்ததொகுப்பாக வெளிவர இப்போதே வாழ்த்துகள்.

*
சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home