தரமான தமிழ்மலர் தி இந்து தீபாவளி மலர் :பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி
சில கணங்களின் மகிழ்வதிர்ச்சி
நம்மைத் திக்குமுக்காட வைத்துவிடும்.
தீபாவளித் திருநாளின் மகிழ்ச்சி ஓராண்டுக்கு
நீடிக்கும்.புத்தாடையும்,கங்காஸ்நானமும்,பட்டாசும்,இஞ்சி மருந்தும் தரும்
மகிழ்ச்சியோடு தீபாவளிமலர் மகிழ்ச்சியும் உண்டு.
நான் வழக்கமாக எல்லா இதழ்களின்
தீபாவளிமலர்களையும் ஒவ்வோர் ஆண்டும் வாங்கி,அநேகமாய் அந்தநாளின் இரவுப்
பொழுதிற்குள் படித்துவிடுவேன்.இந்த ஆண்டு இன்பஅதிர்ச்சி தி இந்து தீபாவளி
மலர்.
எல்லாச் சிலைகளையும் பாரத்தாலும் யாளி பார்க்கும்போது வருமே ஒரு
இன்பஉணர்வு..அந்த இன்பம் தி இந்துவின் தீபாவளி மலரில் இவ்வாண்டு கிடைத்தது.
பக்க
வடிவமைப்பு அருமை.என் முதல் வாழ்த்து ஓவியர் கேசவ்வின் அற்புதமான
ஓவியங்களுக்குதான்.
பின்னணியை விட்டுயர்ந்து முப்பரிமாண பிம்பமாய் பேசுகின்றன அவரது தீபாவளிமலர் ஓவியங்கள்.மனதில்
பதிந்த முகங்கள் கல்வெட்டாய் ஆழப்பதிந்து போயின.
அவர்களில் பெரும்பாலோனார்
இளையமுகங்கள் என்பது இளையோரான எங்களுக்குப் பெருமை.சிவாஅய்யாதுரை,சகாயம் அவர்களில்
இன்னும் நெருக்கமாய் நெஞ்சைத் தொட்டனர்.எங்கள் திருநெல்வேலி மண்ணின் வெள்ளகோவிலில்
எமனைக் கொண்டுநிறுத்தி பேப்போடு போட்ட சிறுகதை மன்னன் புதுமைப்பித்தனின்
கபாடபுரத்தை ஓவியச்செல்வர் டிராட்ஸ்கி மருதுவின் தூரிகைகள் வழியே வழியவிட்டுச்
சிறப்புச் செய்துள்ளீர்கள்.
புதியமுயற்சி.சொற்களைக் கடந்தும் சொல்லிச் செல்லும்
மௌனியின் “சிகிச்சை”யை அவ்வளவு எளிதாய் படித்துவிட முடியுமா? வெளியே கிளம்பும்
அவசரத்தில் நிலைப்படி தட்டியதும் மீண்டும் வீட்டுக்குள் திரும்பி அமர்ந்தபடி
தண்ணீர் அருந்துவோமே அப்படி இருந்தது மௌனியின் “சிகிச்சை.இதோ இந்த இரவிலும்
ஆறாவதுமுறையாய் மோனமாய் வாசித்துக்கொண்டிருக்கிறேன் மௌனியை நாகரிகத்தை
எள்ளிநகையாடியபடி என் எதிரே மௌனமாய் மௌனி.வினய் கைவண்ணம் வியக்க வைக்கிறது.
கு.ப.ரா,நூருன்னிஸா
தி தமிழ் இந்துப் பக்கங்களில் அமர்ந்து நமை உலுக்குகிறாள்.சுந்தர
ராமசாமி,கு.அழகிரிசாமி,ஜி.நாகராஜன்,தி.ஜானகிராமன் தீபாவளி மலரை இலக்கிய தீபமாய்
சுடர்விட வைத்துள்ளார்கள்.
மறந்துபோன மனங்கள் மரத்துப் போகும்படியாக அவர்கள்
இந்துப் பக்கங்களில் ஆட்சிபுரிகிறார்கள்.தீபாவளி மலர் புத்தங்களில் நடிகர்நடிகையர்
படங்களால் நிரப்பிக்கொண்டிருக்கும் தமிழ்இதழ்களுக்கு தி இந்து தீபாவளிமலர்
புதியபாதையைத் துணிந்துகாட்டியுள்ளது.
வழக்கம்போல் எஸ்.ரா.கலக்கியுள்ளார்..காமிக்ஸ்
குறித்து எழுதிக் கலையாக்கியுள்ளார்.ஷங்கர் ராமசுப்ரமணியன் தி இந்து நாளிதழ்
கலைஇலக்கியப் பக்கத்திற்குக் கிடைத்த நல்ல இதழாலாளர்,ஜெயமோகனைப் புதியவினாக்களால்
அணுகியுள்ளார்.
மகாபாரதம் என்ற இதிகாசம் நவீனத்திற்கு எவ்வாறு பொருந்துகிறது என்ற
தெளிவை ஜெயமோகன் தருகிறார்.
அந்த நாளும் வந்திடாதோ? செல்லப்பா ஏங்க
வைக்கிறார்.
ஆபாசம் துளியும் இல்லாமல் தீபாவளி மலரைத் தயாரிக்க முடியும் என்று தி
இந்து அருமையாய் நிறுவியுள்ளது.தி இந்துதமிழின் தலைதீபாவளி பரிசு விரசமற்ற
விழாப்பரிசு.
கருவான எண்ணங்களை வண்ணமாய் உருவாக்கி தீபாவளிப் பண்டமாய் தந்த
இந்துவுக்கு இதயநன்றிகள் பல.தீபாவளி வாழ்த்துக்கள்.
பேராசிரியர்
முனைவர் சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி
Labels: சௌந்தர மகாதேவன், தி இந்து தமிழ், தீபாவளி மலர்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home