நம் வீட்டு வாசல் கோலத்திலிருந்து தொடங்குகின்றது
நம் ஓவியரசனையின் தொடக்கப்புள்ளி.வண்ணங்களில்
குழைத்த சொல்லிலாக் கவிதைகள் ஓவியங்கள்.கண்டதும் விழியில் நுழைந்து இதயம் கவரும்
உன்னதக் கலைவடிவம்.
விடிகாலையின் வெளிச்சத்தில் இந்து நாளிதழ்
மூலமாக கேலிச்சித்திரக் கலைஞராக நன்குஅறிமுகமானவர் கார்டுனிஸ்ட் கேசவ்
வெங்கடராகவன் உன்னதமான ஓவியக்கலைஞரும் கூட. சிற்பங்களுக்குரிய முப்பரிமாணமாய் அவருடைய ஓவியச்சிற்பங்கள் முன்நீண்டுநின்று
உயிர்த்துடிப்பாய் பேசுகின்றன நம்மோடு.
இந்தியப் புராணங்களின்
ஆணிவேரை அறிந்த கலைஞர் கேசவ்.
நீலக்கடலின்
நீட்சியாய்,வான்முகிலின் நீட்சியாய் ஸ்ரீமத்பாகவதத்தை ஆத்மார்த்தமாய் உள்வாங்கி
நீலவண்ணத்திலும் பல கோல வண்ணத்திலும் நாளும் ஓவியங்களைச் சமூகவலைதளங்களில் விதவிதமாய்
தந்துகொண்டே இருக்கிறார்.
இந்தியத் தத்துவ மரபின் உள்ளார்ந்த கதைகூறும் மரபில்
கேசவின் ஓவியங்கள் ஏதோவொரு கதையை வண்ணங்களால் நம்மிடம் சொல்லிக்கொண்டேயிருக்கின்றன.
இந்திய
வீடுகளின்வாசல்கள் வண்ணப்பொடிகளால் அழகுபடுத்தப்பட்ட கோலங்களால் தினமும்
உயிர்பெறுகின்றன எனும்போது இந்திய ஓவியமரபும் அப்படித்தானே இருக்கமுடியும்?
ஸ்ரீராமநவமி
வாழ்த்துக்கள் என்ற தலைப்பிட்டு கேசவ் வரைந்த ஸ்ரீராமர் ஓவியம் கம்பராமாயணப் பாடல்களின்
ஓவியச்சுருக்கமாய் அமைவதைக் காணமுடிகிறது. ,சீதாபிராட்டியார் ராமபிரானின்
இடதுதோளுக்குப் பின் ஆதரவாய் சாய்ந்து ஒன்றி நிற்க , அனுமன் எண் சாண் உடலை
ஈரடியாய் குறுக்கிப் பக்திப்பெருக்கால் தன் தலைவனிடம் சரணாகதியடைந்து கைகூப்பி நிற்க, சரணாகதியடைந்த தன் அன்புத் தொண்டனை
அன்போடும் பாசத்தோடும் அந்தச் சக்ரவர்த்தித் திருமகன் ராமபிரானின் இடக்கரம்
ஆஞ்சநேயரை அன்போடு வருடிக்கொடுக்கிறது.
அவ்வோவியத்தில் இராமபிரானின் கமலக்கண்களில்
கருணையை கேசவ் காட்டுகிறார்.
கேசவுக்கு மிகவும் பிடித்த ஓவியங்கள்
கண்ணன்லீலைகள். கண்ணவண்ணமாம் கருநீல வண்ணத்தில் அவர் நித்தமும் வரையும் ஓவியங்கள்
பெரும்வரவேற்பைப் பெற்றுள்ளன.
முகநூலிலும் ட்விட்டர் வலைதளத்திலும் கண்ணவண்ணம்
கண்ட கலைஞனாக கேசவ் தினமும் வாசகனைவசப்படுத்துகிறார்.காளிங்கமர்த்தனனாக,கோவர்த்தனகிரிதாரியாக ,யசோதை மைந்தனாக ஒவ்வொரு நாளும் கண்ண
ஊர்வலம் நடத்திக்கொண்டுள்ளார்.
ரவிவர்மாவின்
கிருஷ்ண ஓவியங்கள் அவரது மற்ற ஓவியங்களை விடத் தத்ரூபமாய் அமைந்ததைப் போல கேசவின்
கண்ணஓவியங்கள் அவரது தனித்தன்மைக்குச் சான்று பகர்கின்றன.ஆடையில்லாமல்
குட்டிக்குழந்தையாய் யசோதாமுன் நிற்கும் கண்ணனை ரவிவர்மாவின் ஓவியம் அழகியலோடு
பதிவு செய்திருபதைப்போல,சிறுகோவணத்தோடு கண்ணீர்சிந்த யசோதா முன் கண்ணனை கேசவ் ஒரு
கணம் நிறுத்திப் பார்க்கிறார்.
இலைகளையும்,மரப்பட்டைகளையும்,மலர்களையும்
அடிப்படையாகக் கொண்டு இயற்கையாய் உருவாக்கப்பட்ட வண்ணங்கள் ஐரோப்பிய ஓவியக்கலையின்
எண்ணைவண்ண ஒவியங்களின் வருகைக்குப்பின் வேறுதிசையில் பயணித்ததைக் கருத்தில்
கொள்ளவேண்டியிருக்கிறது.
புராணப்பின்னணி
கொண்ட பாத்திரங்களைப் படைக்கும் கேசவ் நம்மை அந்தக் காலத்திற்கு
அழைத்துச்செல்வதில் வெற்றியடைகிறார்.
அவர் படைக்கும் பாத்திரங்கள் அழகான கமலக்கண்கள்
உடையதாக அமைகின்றன.வியப்பையும்,கோபத்தையும்,காதலையும்,கருணையையும்,வருத்தத்தையும்
அவர் அக்கண்கள் மூலம் மிகஎளிதாக உணர்த்திவிடுகிறார்.
அக்ரலிக் ஆன்
கேன்வாஸில் அவர் வரையும் ஓவியங்கள் கொள்ளை அழகு.காஞ்சிப்பெரியவர் படம் கேசவ்வின்
தெளிந்த ஓவியத்திறனுக்கு நற்சான்று.
முன்மாதிரிப்
படங்கள் ஏதுமின்றி மனப்பரப்பில் விரிந்த கற்பனைப் பிம்பத்தைத் தூரிகை நுனியில்
வண்ணங்களால் வார்த்தெடுத்து விடுகிறார்.வாட்டர்கலர்,சார்க்கோல்,பென்சில்
கோட்டோவியம்,மேட் ஓவியம்,கேரள பஞ்சவர்ண ஓவியம் என்று விதவிதமான முறைகளில்
ஓவியங்கள் வரைகிறார்.
இந்து நாளிதழில்
கேலிச்சித்திரங்களுக்கும் அவர் வரையும் வண்ணஒவியங்களுக்கும் துளியும்
தொடர்பில்லாமல் வேறுகரம் கொண்டு,வேறு முகம்கொண்டு ஓவியம் வரைபவராய் நமக்குத்
தெரிகிறார்.
மகாபாரத
யுத்தத்தில் அம்பு தைக்கப்பட்டு இறுதிவினாடியில் இருக்கிற பிதாமகர் பீஷ்மரை கையில் தாங்கிய கிருஷ்ணரைக் கண்களில் வழியும்
கண்ணீரோடு பீஷ்மர் சரணாகதியடைந்து கைக்கூப்பித்தொழும் காட்சியைத் தத்ரூபமாய்
வரைந்து ரசிகனை கண்ணீர்சிந்த வைக்கிறார்.
விதவிதமாய்
கண்ணலீலைகளை வரைந்து கண்ணதாசனாய் மாறிவிடும் கேசவ்வின் எந்த ஓவியமுகமும் நமக்குக்
கண்ணனின் சாயலில் அமைவதாகவே தெரிகிறது.
அவரது புறமனம்,
சமூகத்தில் நித்தமும் நடக்கும் நிகழ்வுகளைக் கோடுகளால் கோபத்தோடு தினமும்
நாளிதழில் பதிவுசெய்கிறது,அவரது அகமனமோ தெய்வீகத்தேடலில் ஆழ்ந்து, புராணக்கதை
மாந்தர்களை மனவானில் தரிசித்து,அவர்களின் கரம்பற்றி நம்மிடம் அழைத்து வருகிறது.
ஜப்பானிய,சீன,ஐரோப்பிய
பாணி என்று நித்தமும் புதுப்புதுப் பாணியில் அவரால் வரைய முடிந்தாலும் அவர்
இந்தியமரபு சார்ந்த ஓவியபாணியில் பெரிதும் லயிக்கிறார்.
பல்லாயிரக்கணக்கான
ஆண்டுகளுக்கு முன் பீம்பேத்கா பாறை வாழிடங்களிலும்,பிற்காலத்தில் அஜந்தாவிலும்
வரையப்பட்ட ஓவியங்களிலும் உள்ள இயல்புமாறாத்தன்மையை கேசவ்வின் ஓவியங்களில்
காணமுடிகிறது.
நீலநிறமும்
செம்மஞ்சள் நிறமும் இவரது பெரும்பாலான ஓவியங்களில் காணக்கிடைக்கும் கண்கொள்ளா
நிறங்கள்.இந்தியன் இங்க் ஓவியங்கள் படிமச்சாயலில் செறிவாய் அமைகின்றன.
பின்னணியும் இவர்
பாத்திரமாந்தர்களை இன்னும் அழகாகக் காட்டுகிறது.எண்ணங்களை வண்ணக்கலவைகளால்
பிம்பமாக முன்னிறுத்தும் கேசவ் கண்ணதாசனாகவும் வண்ணதாசனாகவும் ஒருங்கே
திகழ்கிறார்.கண்ணன் அவர் கரம்பட்டு இன்னும் அதிகமான நீலோற்பவனாக ஜொலிக்கிறான்.
நன்றி:இந்து தமிழ் ஆனந்தஜோதி